Quantcast
Channel: Dinakaran.com |03 Apr 2023
Viewing all 120575 articles
Browse latest View live

சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா இதயம் செயல்படாதபோது மசாஜ் செய்தது எப்படி?

$
0
0

சென்னை : 2016 டிசம்பர் 4ம் தேதி கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்ட பிறகு ஜெயலலிதா இதயம் செயல்படாதபோது, எப்படி ஜெயலலிதாவுக்கு மசாஜ் செய்தீர்கள் என்ற ஆணையத்தின் கேள்விக்கு டெக்னீசியன்கள் அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் இதயம் மற்றும் மயக்கவியல் நிபுணர் டாக்டர் மீனல் எம்.போரா, கதிரியக்கவியல்  நிபுணர் சுதாகர், தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் காமேஷ் ஆகியோர் ஆஜரானார்கள். அவர்களிடம் ஆணைய வழக்கறிஞர் மதுரை எஸ். பார்த்தசாரதி விசாரணை நடத்தினார். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இது குறித்து விசாரணை ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, மீனல் எம் போரா என்பவர் அளித்த வாக்குமூலத்தில், ‘2016ம் செப்டம்பர் 28ம் தேதி மூச்சு திணறல் ஏற்பட்டபோது ஜெயலலிதாவை பார்த்தேன் என்று தெரிவித்துள்ளார். அக்டோபர் 6ம் தேதி ஜெயலலிதாவுக்கு ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை செய்வதற்கு முன்னேற்பாடுகளையும் பார்த்துள்ளார். அக்டோபர் 7ம் தேதி ஜெயலலிதாவுக்கு மூச்சுக்குழல் அறுவை சிகிச்சை செய்யும்போது மயக்க மருந்து கொடுத்துள்ளார். அவர் முன்னிலையில் தான் அறுவை சிகிச்சையும் நடந்துள்ளதாக தெரிவித்தார். கடைசியாக, கடந்த 2016 டிசம்பர் 4ம் தேதி 5 மணிக்கு அவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அப்போது அவரிடம் ஜெயலலிதா உடல்நிலை மோசமாகி விட்டது உடனே மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று நிர்வாகம் அழைத்துள்ளது. அப்போது, அவர் மருத்துவமனைக்கு செல்லும்போது, சிகிச்சை பெறும் அறையில் ஜெயலலிதா நெஞ்சை பிளந்து நேரடியாக இதயத்தில் சிகிச்ைச அளித்துள்ளனர். ஸெனாடெனமி பண்ணிய பிறகும், ஜெயலலிதா நெஞ்சை அழுத்தி மசாஜ் செய்யப்பட்டது. டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதா எக்மோவில் இருந்த நேரத்தில் இரவு 11.20 மணியளவில் அவரது கண்களில் அசைவு ஏற்பட்டது. மெதுவாக மூச்சுவிட்டார். டிசம்பர் 5ம் தேதி அதிகாலை 3.20 மணிக்கு ரத்தம் ஓட்டம் சீரானதை தொடர்ந்து இதயம் தானாக செயல்பட தொடங்கியது. எக்மோ கருவி மூலம் ஜெயலலிதா உயிரை காப்பாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் காமேஷ் அளித்த வாக்குமூலத்தில், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த அறைக்கு எங்களை அழைத்தனர். அவர் இருந்த தனி வார்டில் வைத்தே அவரது நெஞ்சை பிளந்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கொண்டிருந்தது. அப்போது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர்கள் மற்றும் நான் உட்பட 4 டெக்னீசியன்கள் உதவியாக இருந்தோம். இரவு 9 மணி வரை சிகிச்சை நடைபெற்று கொண்டிருந்தது. ஜெயலலிதாவின் நெஞ்சு பகுதியில் அறுவை சிகிச்சை செய்ததும், அவரது இதயத்தை மசாஜ் செய்யும் படி டாக்டர்கள் கூறினார்கள். அதன்படி நான் உட்பட 4 டெக்னீசியன்களும் ஜெயலலிதாவின் இதயத்தை மசாஜ் செய்தோம் என்று கூறினார்கள். அப்போது, ஆணையம் தரப்பு ஒருவருக்கு இதயம் செயல்படாத நேரத்தில், எப்படி மசாஜ் செய்தால் இதயத்தை செயல்பட வைக்க முடியும் என்று டாக்டர்களுக்கு மட்டுமே தெரியும். அப்படி இருக்கும்போது ஜெயலலிதா இதயத்தை நீங்கள் எப்படி மசாஜ் செய்ய முடியும் என்று கேட்டது. அதற்கு டாக்டர்கள் அறிவுறுத்தியதால் நாங்கள் மசாஜ் செய்தோம் என்று காமேஷ் கூறினார். இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. மருத்துவமனை ஐடியா கொடுத்ததா?மயக்கவியல் நிபுணர் மீனலிடம் விசாரணை ஆணையத்தில் பல்வேறு கேள்விகள் சரமாரியாக கேட்கப்பட்டது. அதில், மூத்த டாக்டர்கள் எக்மோ கருவி பொருத்திய பின்பும்  ஜெயலலிதாவுக்கு இதய துடிப்பு, நாடி துடிப்பு, ரத்த ஓட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளனர். எக்மோ கருவி பொருத்திய பின்பு இதய துடிப்பு இருந்ததாக நீங்கள் மட்டும் தான் கூறுகிறீர்கள். மருத்துவமனை நிர்வாகம் உங்களை அது போன்று கூறும் படி அறிவுறுத்தி அழைத்து வந்துள்ளது சரிதானா என்று கேட்டது. அதற்கு, டாக்டர் மறுப்பு தெரிவித்தார். ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதற்கு பிறகு, கண்களில் அசைவோ, இதய துடிப்போ இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால், டாக்டர் மீனல் மட்டும் மாறுபாடாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வாறு அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.


2.0 படத்தை இணையதளத்தில் வெளியிட தமிழ் ராக்கர்சுக்கு தடை : சென்னை ஐகோர்ட் உத்தரவு

$
0
0

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ்  இணையதளங்களில் வெளியிட தடை விதித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், மிகப்பெரிய பட்ஜெட்டில்  தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை  முறைகேடாக 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். குறிப்பாக ‘’தமிழ் ராக்கர்ஸ்’’ இணையதளத்தில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.இந்த மனு நீதிபதி சுந்தர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இணைய தள முகவரியில் மாற்றம் செய்து படங்களை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிடுவதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, தமிழ் ராக்கர்ஸ்’’க்கு சொந்தமான  சுமார்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் உட்பட 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் 2.0 படத்தை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

அனகாபுத்தூரில் புதிதாக கட்டப்பட்டும் பயனில்லை 2 ஆண்டாக பூட்டி கிடக்கும் நவீன ஆடு அறுக்கும் கூடம்: நகராட்சி குப்பை வண்டிகளின் பார்க்கிங் இடமானது

$
0
0

பல்லாவரம்: அனகாபுத்தூரில் புதிதாக கட்டப்பட்ட நவீன ஆடு அறுக்கும் கூடம் 2 ஆண்டாக பூட்டியே கிடக்கிறது. இதனால், அங்கு நகராட்சி  சொந்தமான குப்பை வண்டிகளை நிறுத்தி வைத்துள்ளனர். அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் நோய் பீதியில் உள்ளனர். அனகாபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள்  தங்களது பகுதியில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் ஆடு இறைச்சியை வாங்குவதை தவிர்க்கும் பொருட்டு, தங்களுக்கு நவீன ஆடு அறுக்கும்  கூடம் அமைத்துத் தர வேண்டும என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.அதன்படி, கடந்த 2013-2014ம் ஆண்டு பல்லாவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் ₹30 லட்சம் செலவில் அனகாபுத்தூர்  நகராட்சி அலுவலகத்தின் அருகில் நவீன ஆடு அறுக்கும் கூடம் கட்டப்பட்டது. பின்னர், திறக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டது.  அதன்பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. தற்போது அந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் தங்களது பழுதடைந்த குப்பை வண்டிகளை  குவித்து வைத்து, அந்தக் கட்டிடத்தையே பழைய குடோனாக மாற்றி வருகின்றனர். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதுடன், ஆடு அறுக்கும்  கூடத்தை சுற்றிலும் கால்நடைகளின் கழிவுகள் அதிக அளவில் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், அந்தப் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசிக் காணப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் நோய் பீதியில்  உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மழைக் காலங்களில் நோய் பராவாமல் இருக்க பொதுமக்கள் என்னென்ன முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வரும் நகராட்சி நிர்வாகம், தனது அலுவலகத்தின் அருகிலேயே நிலவும்  சுகாதார சீர்கேடை கண்டு கொள்ளாமல் உள்ளது வேடிக்கையாகவும் அதே சமையத்தில் வேதனையாகவும் உள்ளது.எனவே, இனியாவது பொதுமக்களின் நலம் கருதி, முதலில் ஆடு அறுக்கும் கூடத்தை சுற்றிலும் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை வண்டிகளை  முறையாக அப்புறப்படுத்தி, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து, அதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’’ என்றனர்.

சுகாதார ஆய்வாளர் மரணம்: ஊழியர்களை கண்காணிக்க மாநகராட்சி உத்தரவு

$
0
0

சென்னை:  சென்னை மாநகராட்சியில் மாதவரம் மண்டத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வந்த  ஜெ.தீனதயாளன் (52) என்பவர் சில நாட்களுக்கு  முன்பு பணியில் இருந்த போது மாரடைப்பால் உயிரிழந்தார். டெங்கு ஒழிப்பு பணி என்ற பெயரில் கடந்த 2 மாதங்களாக அவருக்கு விடுப்பு அளிக்காமல்  பணியாற்ற வைத்ததுதான் அவரின் மரணத்திற்கு காரணம் என்று மாநகராட்சி ஊழியர்கள்  தெரிவித்தனர். மேலும், அவரின் மனைவி உடல்நலக்  குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கூட  தீனதயாளனுக்கு விடுப்பு அளிக்கவில்லை என்றும் அவர்கள்  கூறினர்.  இந்நிலையில், மாநகராட்சி ஊழியர்கள் உடல்நிலையை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் ெமாத்தம் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள்  பணியாற்றுகின்றனர். பருவ மழைக்காலங்களில் கொசு ஒழிப்பு பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள் மற்றும்  சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்டோர்  தொடர்ச்சியாக பணியாற்றி வருகின்றனர். இதனால் அவர்கள் உடல்நலத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே அனைத்து ஊழியர்களும்  முறையாக மருத்துவ பரிேசாதனை செய்து கொள்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும்.

மருத்துவ, இறைச்சி மற்றும் குப்பை கழிவுகள் கொட்டும் இடமாக மாறியது மாசடைந்து வரும் சென்னை ஏரிகள்

$
0
0

சென்னை: மருத்துவ, இறைச்சி மற்றும் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், சென்னையில் உள்ள ஏரிகள் மாசடைந்து வருகிறது. இதனால், குடிநீர்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அதை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். சென்னையில் ஒரு காலத்தில் திரும்பிய  பக்கமெல்லாம் நீர்நிலைகள் தெரிந்தது. ஆனால், தற்போது நீர் நிலைகளில் வானுயர அளவுக்கு கட்டிடங்கள் அன்னாந்து பார்க்க வைக்கிறது.  சென்னைக்கு குடிநீர் ஆதாரமாகவும், புறநகர் பகுதிகளுக்கு விவசாய பாசனத்திற்கும் சென்னையில் ஏராளமான ஏரிகள் இருந்தது. ஆனால், இன்று  சென்னையில் உள்ள ஏரிகள் என்றால் அனைவருக்கும் நினைவுக்கு வருவது செம்பரம்பாக்கம், புழல், சோழவரம், பூண்டி ஏரிகள் மட்டும்தான்.உண்மையிலேயே சென்னையில் அம்பத்தூர் ஏரி, ரெட்டேரி ஏரி, கொரட்டூர் ஏரி, சிட்லப்பாக்கம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, சேத்துப்பட்டு ஏரி, சோழவரம்  ஏரி, பல்லாவரம் ஏரி, புழல் ஏரி, பெருங்குடி ஏரி, போரூர் ஏரி, மங்கலேரி, மணலி ஏரி, வேளச்சேரி ஏரி, முகப்பேர் ஏரி, மேடவாக்கம் ஏரி, ஓட்டேரி,  வியாசர்பாடி ஏரி, தேனாம்பேட்டை ஏரி, வில்லிவாக்கம் ஏரி, கல்லுக்குட்டை ஏரி, பாக்கம் ஏரி, திருநின்றவூர் ஏரி, முடிச்சூர் ஏரி, விச்சூர் ஏரி, பிச்சாட்டூர்  ஏரி, பாடியநல்லூர் ஏரி, முடிச்சூர் ஏரி, செம்பாக்கம் ஏரி, மாம்பலம் ஏரி, கோடம்பாக்கம் டேங்க் ஏரி, வேப்பேரி ஏரி என மொத்தம் 36 ஏரிகள் உள்ளது.  இதில், பல ஏரிகள் காணாமல் போய் உள்ளது.இருக்கிற ஏரிகளையும் அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், ஆங்காங்கே மணல் திட்டுகள் ஏற்பட்டு புதர்மண்டி காட்சியளிக்கிறது. ஏரிகளை  முறையாக தூர்வாரப்படுவதில்லை. இதற்காக ஒதுக்கப்படும் நிதியும் எங்கே போகிறது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.அதிகாரிகளின் அலட்சியத்தால், பருவமழை காலத்தில் பெய்ய கூடிய குறைந்த அளவிலான மழைநீரை கூட முறையாக சேமித்து வைக்க முடியாத  அவலநிலை உள்ளது. பல நூறு ஏக்கரில் கொண்ட மேற்கண்ட ஏரிகளின் பரப்பளவு தற்போது பாதிக்கு பாதியாக குறைந்து உள்ளது.இதற்கு முக்கிய காரணம் நீர்நிலைகளில் அமைக்கப்பட்ட பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்புகள்தான். நீர்நிலைகளில் சட்டவிரோதமாக கட்டுமான  பணிகள் தொடங்கும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கரன்சி நோட்டுகளுக்கு மயங்கி சட்டவிரோதமாக மின்  இணைப்பு, பட்டா, வரி வசூல் ஆகியவற்றை செய்கின்றனர். இதை பயன்படுத்தி ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனர். இதனால், பல  ஆண்டுகளாக வழக்கு நீதிமன்றத்தில் நடப்பதால், அரசு நிலத்தை மீட்பதில் சிக்கல் ஏற்படுகிறது.ஏரிகளை பராமரிக்கும் பொதுப்பணி மற்றும் உள்ளாட்சித்துறை அலட்சியத்தால் கடந்த 2015ம் ஆண்டு தலைநகரே தண்ணீரில் மூழ்கியது. அப்போது, ஏரி  மற்றும் குளங்களை முறையாக தூர்வாரி இருந்ததால், பெருமளவு தண்ணீரை சேமித்து வைத்திருக்கலாம். தற்போது, தலைநகரான சென்னையில்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இப்போதுதான், தண்ணீரின் மதிப்பை அதிகாரிகள்  உணர்கின்றனர். பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் எப்படி அனுப்புவது என தெரியாமல் திண்டாடும் அதிகாரிகள், மழை பெய்ய வேண்டி கோயில்  கோயிலாக சிறப்பு யாகம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்தாண்டு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இதனால்,  ‘அந்த ஆண்டவன்தான் கண் திறக்க வேண்டும்’ என்று நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.இதுஒருபுறமிருக்க, பெரும்பாலான ஏரிகள் மருத்துவ, குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டும் இடமாக மாறி உள்ளன. மேலும், இயற்கை உபாதைகளை  கழிக்கும் இடமாகவும் மாறிவிட்டது. இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, ஏரி நீரும் மாசடைந்து வருகிறது. இதை தடுக்க வேண்டிய அதிகாரிகள்  கண்டு காணாமல் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் புழல் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதாக தினகரன் நாளிதழில்  புகைப்பட்டதுடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்குப்பதிந்து புழல் ஏரியில் மருத்துவக்கழிவுகளை  கொட்ட தடை விதித்தது.இதையடுத்து, விழித்து கொண்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏரியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகளை உடனடியாக அகற்றினர். ஆனால், தற்போது  மீண்டும் பெரும்பாலான ஏரிகள் கழிவுகளை கொட்டும் இடமாகவும், இயற்கை உபாதைகளையும் கழிக்கும் இடமாகவும் உள்ளது. குறிப்பாக, புழல் ஏரி,  கொளத்தூர் ரெட்டேரி ஏரி, கொரட்டூர் ஏரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. கொளத்தூர் லட்சுமிபுரம் விநாயகபுரம்  பகுதியில் ரெட்டேரி உள்ளது. இந்த ஏரி சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளது. இதனை சுற்றி வீடுகள் அமைக்கப்பட்டு ஏரியை பலர் ஆக்கிரமிப்பு  செய்து உள்ளார்கள். இந்த ஏரியில் வாகனங்கள் கழுவுவது, மலம் மற்றும் சிறுநீர் கழிப்பது குப்பைகள், மீன் மற்றும் இறைச்சி கழிவுகள், மருத்துவ  கழிவுகள் ஆகியவற்றை கொட்டப்படுகிறது.மேலும், ஆகாயத்தாமரை, புற்கள் வளர்ந்து ஏரியே தெரியாத அளவிற்கு உள்ளது. மழை அதிகம் பெய்யும் போது இந்த ஆக்கிரமிப்பால் மழைநீர்  தாழ்வான வீடுகளில் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக திகழும் ஏரிகளை அதிகாரிகளை முறையாக  பராமரித்து, ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றி கம்பி வேலி அமைத்து மாசுகட்டுபாட்டில் இருந்து காக்க வேண்டும். ஏரிகளை முறையாக தூர்வாரினால்  மழை காலங்களில் தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதனால் சென்னையில் ஓரளவிற்கு தண்ணீர் பிரச்சனையை தீர்க்கலாம் என்பது சமூக  ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

சென்னை மாணவியின் வறுமை டாக்டர் கனவை தகர்த்தது பிலிப்பைன்சில் மருத்துவம் படித்தார் பிளாட்பாரத்தில் இட்லி விற்கிறார்

$
0
0

ஆலந்தூர்: பிலிப்பைன்சில் மருத்துவம் படித்த மாணவி குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியில் முடித்து கொண்டு, சென்னையில்  பிளாட்பாரத்தில் இட்லி விற்று வருகிறார். பெற்றோரை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவியாக இருப்பதாக கண்ணீருடன்  தெரிவித்தார். சென்னை பழவந்தாங்கல், பக்தவச்சலம் நகர், பிரதான சாலையில் வசிப்பவர் பழனிசாமி (48). இவர் சைக்கிளில் தெரு தெருவாக சென்று  டீ வியாபாரம் செய்து வருகிறார். இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம், வெண்ணாந்தூர். அங்கு மளிகை கடை நடத்தி வந்த அவர் கடந்த 3  ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு சொந்தமான ஒரு கிரவுண்டு நிலத்தை விற்றுவிட்டு சென்னைக்கு குடும்பத்துடன் பிழைப்பு தேடி வந்தார். இவருக்கு வனிதா (43) என்ற மனைவியும். கிருபா (21), கவுசல்யா (19), கவுரி (17) என்ற மூன்று மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகள் கிருபா  2015ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 980 மதிப்பெண்கள் பெற்றார். டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டு தனது விருப்பத்தை தந்தையிடம் கூறினார். மகளின்  ஆசையை நிறைவேற்ற விரும்பிய பழனிச்சாமி சொத்தை விற்று வைத்திருந்த பணத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில்  படிக்க 5 லட்சம் பணத்தை கட்டி கிருபாவை சேர்த்தனர். முதலாம் ஆண்டு படிப்பை புனேவில் முடித்த கிருபா 2ம் ஆண்டு படிப்பினை  பிலிப்பைன்ஸ்சில் தொடர்ந்தார். ஆண்டுக்கு 3 லட்சம் மருத்துவ கல்வி கட்டணமும், மாதம் 15 ஆயிரம் ஹாஸ்டல் கட்டணமும் செலுத்த வேண்டும். இவற்றை 2 ஆண்டுகள் மட்டும்  கிருபாவின் தந்தையால் கட்ட முடிந்தது. 3ம் ஆண்டு படிப்பை தொடர வேண்டும் என்றால் கண்டிப்பாக கட்டணம் செலுத்தவேண்டும் என்று கல்லூரி  நிர்வாகம் கூறிவிட்டது. இதனால், மனமுடைந்த கிருபா தனது தந்தைக்கு தொல்லை கொடுக்க விரும்பாமல் மருத்துவ படிப்பை பாதியிலேயே  நிறுத்திவிட்டு சென்னை திரும்பினார். இந்நிலையில், தற்போது கிருபா தனது தாயார் வனிதாவுக்கு துணையாக பழவந்தாங்கலில் ஒரு பள்ளக்கூடம்  எதிரில் உள்ள பிளாட்பாரத்தில் தள்ளுவண்டி கடையில் இட்லி தோசை விற்கும் தொழிலில் முழுமையாக தன்னை ஈடுபடுத்தியுள்ளார்.இதுகுறித்து மருத்துவ மாணவி கிருபா கூறியதாவது: முதலில் டாக்டருக்கு படிக்க ஆசைப்பட்டது எனது மிகப்பெரிய தவறு. சேலத்தில் ஒழுங்காக  மளிகை கடை நடத்தி சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த எங்கள் பெற்றோர் எனது விருப்பத்திற்காக தொழிலை விட்டு, சொத்தை விற்று சென்னைக்கு  வந்தோம். இப்போது தனது தந்தை தெருதெருவாக சைக்கிளில் டீ விற்று வருகிறார். தாயார் தள்ளு வண்டியில் டிபன் விற்கிறார். என்னால் தான் இந்த  நிலைக்கு அவர்கள் வந்ததால் தற்போது அவர்களுக்கு உதவியாக தள்ளுவண்டிக்கடையில் வேலைசெய்து வருகிறேன்.எனது முதல் தங்கை கவுசல்யா மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 4 ஆயிரம் சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார். கடைசி தங்கை கவுரி  இங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். டாக்டர் படிப்பை தொடர வேண்டுமே என்ற ஆசை உள்மனதில் இருந்தாலும் எங்கள் குடும்ப நிலையை  நினைத்து அவர்களுக்கு உதவியாக இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். எனது தந்தை தாயாரும் நானும் என்னதான் உழைத்தாலும் வரும்  வருமானம் வாடகைக்கும் சாப்பாடு மற்றும் கரன்ட் பில்லுக்குமே சரியாக உள்ளது.இவ்வாறு அவர் கண்கலங்கியபடி கூறினார். ‘கருணை காட்டினால் நன்றியோடு இருப்பேன்’ பழனிச்சாமி கூறுகையில், ‘‘எனது மகளை டாக்டராக ஆக்கி பார்க்க ஆசைப்பட்டேன் அது முடியவில்லை, எனது மகள் தள்ளுவண்டியில் தோசை  சுடுவதை பார்த்து பலரும் வருத்தப்படுகிறார்கள். தாராளம் மனம் கொண்டவர்கள் என் மகளின் மருத்துவ படிப்பு செலவினை ஏற்றால்  நன்றியுள்ளவர்களாக இருப்போம்’’ என்றார்.

விசாரணைக்கு அழைத்து நிர்வாணமாக்கி தாக்குதல் எஸ்.ஐ மீது மனித உரிமை ஆணையம் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய கமிஷனருக்கு உத்தரவு

$
0
0

சென்னை: விசாரணைக்கு அழைத்துச் சென்று இருவரை நிர்வாணமாக்கி தாக்கிய எஸ்.ஐ மீது மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்துள்ளது.  திருவேற்காடு, கோலடி அன்பு நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் (27). இவரது மனைவி ஜோஸ்பின் (25). இதே குடியிருப்பில் வசித்து வரும் சரளா  என்பவருக்கும், ஜோஸ்பினுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 26ம் தேதி இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் கடுமையாக  தாக்கிக் கொண்டனர். அதை தடுக்க முயன்ற சரளாவின் கணவரை, ஜோஸ்பினின் உறவினர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். அதில் காயமடைந்த சரளா  மற்றும் அவரது கணவர் ஆகியோர் திருவேற்காடு காவல்நிலையம் சென்று புகார் அளித்தனர். அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் ஜோஸ்பினின் கணவர் ராஜ்குமார் மற்றும் அவரது சகோதரர் ராஜேஷ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்து  வந்துள்ளனர். அப்போது பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் குமரன் இருவரையும் நிர்வாணமாக்கி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதில்  பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் தகவல் அறிந்து காவல் நிலையம் வந்த உறவினர்கள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அங்கே போலீசார் குவிக்கப்பட்டு, பொதுமக்களிடம் உயர் அதிகாரி தலைமையில்  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான செய்தியை தினகரன் நாளிதழில் பார்த்த மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை  ஜெயசந்திரன் தாமாக முன்வந்து (சூமோட்டோ )வழக்காக பதிவு செய்து விசாரணைக்கு எடுத்தார். அப்போது அவர், சப்-இன்ஸ்பெக்டர் குமரன் செய்தது  மனித உரிமை மீறல் ஆகாதா? அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்ககூடாது. மேலும் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை  எழுப்பி, இந்த சம்பவம் தொடர்பாக ஆணையர் அல்லது இணை ஆணையர் பதவில் இருப்பவர் விசாரணை நடத்தி அறிக்கையை 4 வாரத்திற்குள் மாநில  மனித உரிமை ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி தேமுதிக சாலை மறியல்: நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

$
0
0

தண்டையார்பேட்டை: எண்ணூர்-மணலி நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி தேமுதிகவினர் சாலை மறியல் போராட்டம்  நடத்தினர். அவர்களை போலீசர் கைது செய்தனர். ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர், ஐஓசி,  கொருக்குபேட்டை, கருமாரி அம்மன் நகர், நேரு நகர் உள்பட பல பகுதிகள் எண்ணூர் - மணலி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளன. இங்கு 80  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பாரிமுனை, சென்ட்ரல், தங்கசாலை, மூலக்கடை, செங்குன்றம் ஆகிய  பகுதிகளில் உள்ள கல்லூரிகள், பள்ளிகளுக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்காவும் தினமும் மேற்கண்ட சாலை வழியாகதான்  செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.குறிப்பாக நேரு நகரில் உள்ள ரயில்வே கேட் எந்த நேரத்தில் மூடப்படும் என யாருக்கும் தெரியாது. இதனால், இவ்வழியாக ரயில் வரும்போது  திடீரென கேட்டை இழுத்து பூட்டிவிடுவதால் பல மணிநேரம் காத்திருக்கும் மக்கள், மாணவ, மாணவிகள், தொழிலாளர்கள் கடும் அவதியடைந்து  வருகின்றனர். இதையொட்டி இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து,  எண்ணூர்  மணலி நெடுஞ்சாலையில் 157 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதற்கான பணிகளை தொடங்குவதற்கு முன் மண் பரிசோதனை நடந்தது. பின்னர் மேம்பாலத்துக்கான பணிகளை தொடங்கினர். அந்த நேரத்தில், வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில், மெட்ரோ ரயில்வே பணி தொடங்கப்பட்டது.  இதனால், பொதுமக்களுக்கு போக்குவரத்து பாதிக்கும் என கருதி, எண்ணூர் நெடுஞ்சாலையில் அமைக்க இருந்த மேம்பால பணி நிறுத்தப்பட்டது.இந்நிலையில், மேற்கண்ட மேம்பால பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி சென்னை கொருக்குபேட்டை, கே.என்.எஸ் டிப்போ அருகே ஆர்.கே.நகர்  பகுதி தேமுதிக சார்பில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார்.  இதில் 100க்கு மேற்பட்ட தேமுதிகவினர் கலந்து கொண்டு, மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் எண்ணூர் நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து, ஆர்.கே.நகர் போலீசார், சம்பவ இடத்துக்கு  சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கு மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர், அவர்களை அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண  மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


புழல் 22, 23வது வார்டுகளில் பஸ் வசதி இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி

$
0
0

புழல்: புழல் 22 மற்றும் 23வது வார்டுகளை இணைக்கும், காந்தி பிரதான சாலையில் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இயங்கியும் இதுவரை பஸ்  போக்குவரத்து விடப்படவில்லை. இவ்வழியாக மினி பேருந்து இயக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 22 மற்றும் 23வது வார்டுகளை இணைக்கும் காந்தி பிரதான சாலையில் ஊராட்சி ஒன்றிய  அலுவலகம், இஎஸ்ஐ மருத்துவமனை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வேளாண்மை துறை, உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள், மதுவிலக்கு  பிரிவு காவல் நிலையம், வார்டு அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். எனினும், தரமான தார்சாலைகள் கொண்ட இந்த பிரதான  சாலையில் இதுவரையில் மாநகர பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் இங்கு வரும் மக்கள் அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் வந்து  செல்வதில பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகர போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை இந்த பகுதி மக்களும், பொதுநல  சங்கங்களும் வலியுறுத்தியும், மாநகர பேருந்தை விடுவதற்கு இதுவரையில், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, செங்குன்றத்தில் இருந்து புழல் காந்தி பிரதான சாலை வழியாக அம்பத்தூர் வரை புதிதாக ஒரு மினி மாநகர பேருந்து விடுவதற்கு  சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்பு பிரிவு கலைப்புக்கு ஐகோர்ட் தடை

$
0
0

சென்னை: விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்பு பிரிவை கூண்டோடு கலைக்க உத்தரவிட்ட தனி  நீதிபதியின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை ஷெனாய் நகர் பகுதியில் தன் வீட்டின் முன்புறம் மாநகராட்சி  நிலத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரை அகற்றக்கோரி சென்னை மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என  மாநகராட்சிக்கு எதிராக லட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம்  அளித்த தீர்ப்பில், ‘‘மாநகராட்சியில் ஊழல், லஞ்சம் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியதுடன், அதை தடுக்க வேண்டிய மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு  பிரிவு தன் கடமையில் இருந்து தவறி விட்டதால் அந்த பிரிவை கூண்டோடு கலைக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.  மேலும், ‘‘அந்த பிரிவில் உள்ள அனைவரையும் கூண்டோடு இடமாற்றம் செய்துவிட்டு, டிஜிபியிடம் கலந்தாலோசித்து லஞ்ச ஒழிப்பு துறையின்  அதிகாரிகளை கொண்ட சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதுதவிர, லஞ்ச ஒழிப்பு புகார்களை பெற தனி கவுன்டர்  உருவாக்க வேண்டும், அனைத்து மாநகராட்சி அலுவலகங்களிலும் ஊழல் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகளை வைக்க  வேண்டும், சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும், ரகசிய குழு அமைத்து மாநகராட்சி அலுவலகங்களில் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும்,  அனைத்து அதிகாரிகளின் சொத்து விவரங்களை சேகரிக்க வேண்டும், முறைகேடாக சேர்க்கப்பட்ட சொத்தாக இருக்கும்பட்சத்தில் இந்திய தண்டனைச்  சட்டத்தின்படியும் ஊழல் தடுப்பு சட்டத்தின் படியும், துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் உத்தரவிட்டிருந்தார்.  தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை மாநகராட்சி ஆணையர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள்  சத்தியநாராயண், ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.  அப்போது நீதிபதிகள், ‘‘தனி நீதிபதி உத்தரவுக்கு  பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? 20 ஆயிரம் பேர் பணிபுரியக்கூடிய மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்புக்கு முறையான நடைமுறை இல்லை.  லஞ்ச புகார் மீதான நடவடிக்கையில் சிக்கும் அதிகாரிகள் குறைந்தபட்சம் ஒரு வருடமாவது தண்டிக்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்தனர். மேலும்,  ‘‘சென்னையில் எல்லா பக்கமும் விதிமீறல் கட்டிடம் உள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவு இல்லாமல் நீங்களாகவே கூட நடவடிக்கை எடுக்கலாம்’’  என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.அப்போது, அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, மாநகராட்சி லஞ்ச ஒழிப்பு பிரிவில் 3 அதிகாரிகள் மட்டுமே உள்ளதாகவும், விதிமீறல்  கட்டிடங்கள் மீது நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை முறையாக நிறைவேற்றுவதாகவும் தெரிவித்தார்.   வரவேற்பறையில் சிசிடிவி கேமராக்கள்  வைக்க வேண்டுமென்ற உத்தரவை அமல்படுத்த அவகாசம் தேவை என்றும், லஞ்ச ஒழிப்பு பிரிவை கலைக்கும் உத்தரவையும், புதிய குழுவை லஞ்ச  ஒழிப்பு துறையினரை கொண்டு நியமிக்க வேண்டும் என்ற உத்தரவையும் மட்டுமே எதிர்ப்பதாகவும், மற்ற உத்தரவுகளை பின்பற்றுவதாகவும்  தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் லஞ்ச ஒழிப்பு பிரிவை கலைக்கும் உத்தரவுக்கும், புதிய குழுவை  ஏற்படுத்த வேண்டுமென்ற உத்தரவுக்கும் தடைவிதித்து உத்தரவிட்டனர்.

புதிய டாஸ்மாக் திறந்ததற்கு எதிர்ப்பு பொதுமக்கள்- போலீசார் தள்ளுமுள்ளுவால் பரபரப்பு: பெண்கள் உள்பட 50 பேர் கைது

$
0
0

கொடுங்கையூர்: புதிய டாஸ்மாக் கடை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  இதையடுத்து 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர், மூலக்கடை சத்யவாணி முத்து தெருவில், கடந்த சில  நாட்களுக்கு மன் புதிய டாஸ்மாக் கடை திறப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.  அப்போது அங்கு வந்த போலீசார், இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படாது என உறுதியளித்தனர். ஆனால், கடந்த வாரம் கடையை சுத்தம்  செய்து, மதுபாட்டில்கள் லாரியில் கொண்டு வரப்பட்டு, அங்கு விற்பனைக்காக இறக்கி வைத்தனர். இதையறிந்த பொதுமக்கள் அங்கு வந்து மீண்டும் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், மீண்டும் அவர்களிடம்  சமரசம் பேசி, கடையை திறக்காமல் நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர். இதையடுத்து, சில மதுபாட்டில்களை கடையில் வைத்துவிட்டு, அந்த லாரி  சென்றது. இந்நிலையில், மேற்கண்ட பகுதியில் புதிய டாஸ்மாக் கடை (கடை எண்223) நேற்று மதியம் திறக்கப்பட்டது. குடிமகன்களும், சந்தோஷமாக  மதுபாட்டில்களை வாங்கி சென்றனர். இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் உள்பட 50க்கு மேற்பட்டோர் நேற்று மதியம் டாஸ்மாக் கடை முன் திரண்டு  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். ஆனால் அதில் உடன்பாடு  ஏற்படவில்லை. டாஸ்மாக் கடையை மூடினால் மட்டுமே கலைந்து செல்வோம் என பொதுமக்கள் திட்டவட்டமாக கூறினர். இதனால் போலீசாரக்கும்,  பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றினர்.  இதையடுத்து அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

பூட்டிய வீட்டில் தீ

$
0
0

சென்னை: சென்னை தி.நகர் ராஜாபிள்ளை தோட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தகிருஷ்ணன் (58). தனியார் நிறுவன ஊழியர். ேநற்று முன்தினம் மாலை  வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டனர். இரவு 7 மணி அளவில் பூட்டிய வீட்டில் இருந்து கரும் புகையுடன் தீ வெளியேறியது.  இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் சம்பவம் குறித்து ஆனந்த கிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி, தனது மனைவி சுபாஷினி மற்றும் இரண்டு மகன்களுடன் விரைந்து வந்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து  தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட பகுதி குறுகலான பகுதி என்பதால் தீயணைப்பு வாகனம் உள்ளே வருவதற்குள் வீட்டில்  இருந்த எல்இடி டிவி, கணினி, மின்னணு பொருட்கள், துணிகள் ஆகியவை நாசமானது.   

4 பேர் உயிரிழப்புக்கு காரணமான வடபழனி அடுக்குமாடி குடியிருப்பு விவகாரம்: 2வது நாளாக விடிய விடிய இடிப்பு

$
0
0

சென்னை: நான்கு பேர் உயிரிழப்புக்கு காரணமான வடபழனி அடுக்குமாடி குடியிருப்பு இன்றுக்குள் இடித்து முடிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள்  தெரிவித்தனர்.  வடபழனி தெற்கு பெருமாள் கோவில் தெருவில் உள்ள 4 அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த வருடம் மே மாதம் அதிகாலை பயங்கர தீ  விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய தமிழக அரசு,  அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.இந்நிலையில், அந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும், அந்த கட்டிடத்தை இடிக்க கோரியும், கட்டிடத்திற்கு அனுமதியளித்த  அதிகாரிகள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரித்த உயர் நீதிமன்றம், அதிகாரிகள் மீது  இதுவரை நடவடிக்கை எடுக்காமல்  இருப்பது தொடர்பாகவும், அந்த கட்டிடத்தை இடிக்காமல் இருப்பது தொடர்பாகவும் விளக்கம் அளிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் நேற்று ஆஜராக  வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து காலை மாநகராட்சி சட்ட குழும அதிகாரிகளுடன், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை நடத்தியதாகவும், இந்த  ஆலோசனை முடிவில் அந்த கட்டிடத்தை உடனடியாக இடிக்க ஆணையர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சியின்  கோடம்பாக்கம் மண்டல அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை அந்த இடத்தில் ஆய்வு நடத்தினர். பின்னர், இரவு 11 மணிக்கு மேல் கட்டிடத்தை  இடிக்கும் பணியை தொடங்கினர். இந்த பணி விடிய விடிய நடைபெற்றது. நள்ளிரவில் சிறிய இயந்திரத்தை கொண்டு கட்டிடத்தை இடிக்கும் பணியில்  மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை முதல் பொக்லைன் இயந்திரத்தை வைத்து கட்டிடம் முழுவதையும் இடிக்கும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு  வருகின்றனர். இந்த பணியானது விடிய விடிய  நடைபெற்றது. இன்று காலைக்குள் கட்டிடம் முழுவதும் இடித்து முடிக்கப்பட்டு விடும் என்று  மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாநகராட்சி ஆணையர் இன்று ஆஜராக வேண்டும்: உயர் நீதிமன்றம் கண்டிப்பு

$
0
0

சென்னை: வடபழனி தீ விபத்து விவகார வழக்கில் மாநகராட்சி ஆணையர் நேற்று ஆஜராக வில்லை. இன்று ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம்  கண்டிப்புடன்  உத்தரவிட்டுள்ளது. வடபழனி சிவன் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2017 மே 8ம் தேதி மின்கசிவு  காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மீனாட்சி, சந்தியா உள்ளிட்ட 4 பேர் உடல் கருகி பலியாகினர். 5 பேர் படுகாயமடைந்தனர்.  இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திய தமிழக அரசு, அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி  அதிகாரிகள் அந்த கட்டிடத்திற்கு சீல் வைத்தனர்.  இந்நிலையில், அந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாகவும் அந்த கட்டிடத்தை இடிக்க கோரியும், அந்த கட்டிடத்திற்கு அனுமதி  அளித்த அதிகாரிகள் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடக் கோரியும் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் பொதுநல  வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் நேற்று முன்தினம்  விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல், ‘‘சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில்  உள்ளது’’ என்று தெரிவித்தார்.மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிடும்போது, ‘‘விபத்து நடந்த கட்டிடத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு மீண்டும் அங்கு மக்கள்  குடியிருந்து வருகிறார்கள். கட்டிட உரிமையாளருக்கு அதிகாரிகள் ஆதரவு உள்ளதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என்றார்.  இதைக்கேட்ட நீதிபதிகள், ‘‘அதிகாரிகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, அந்த கட்டிடத்தை ஏன் இடிக்கவில்லை என்று  விளக்கமளிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் புதன்கிழமை (நேற்று) காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.   வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி ஆணையர் ஆஜராகவில்லை. நீதிபதிகள் மாநகராட்சி ஆணையர் எங்கே என்று கேட்டனர். அதற்கு கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜகோபாலன், ‘‘மாநகராட்சி ஆணையர் சிறப்பு  பணிக்காக வெளியூர் சென்றுள்ளார்’’ என்று கூறினார். இதை கேட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் நாங்கள் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடுவதற்கு  முன்பே சென்றாரா, அதற்கு பிறகு சென்றாரா? என்று கேள்வி எழுப்பியதுடன் நீதிமன்றம் உத்தரவிட்டால் ஆஜராக வேண்டும். நாளை (இன்று)   கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தி.நகர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு 2 பஸ்களுக்கு இடையே சிக்கி பெண் உடல் நசுங்கி சாவு: டிரைவரின் கவனக்குறைவால் விபரீதம்

$
0
0

சென்னை: தி.நகர் பேருந்து நிலையத்தில் டிரைவரின் கவனக்குறைவால் இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிய தனியார் நிறுவன பெண் ஊழியர்  ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி தெருவை சேர்ந்தவர் சகாதேவன் (50). இவரது மனைவி வள்ளி (48).  இவர், பெருங்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ேநற்று காலை பெருங்குடி செல்வதற்காக தி.நகர் பேருந்து  நிலையத்திற்கு வந்தார். அப்போது, பேருந்து நிலையத்தில் இட நெருக்கடியால் தி.நகரில் இருந்து கண்ணகி நகர் செல்லும் 5ஜி மாநகர பேருந்தும்,  தி.நகரில் இருந்து திருப்போரூர் செல்லும் 519 மாநகர பேருந்தும் நெருக்கமாக நிறுத்தப்பட்டிருந்தது.இதை பார்த்த வள்ளி 5ஜி மாநகர பேருந்தில் ஏறுவதற்கு இரண்டு பேருந்துகளுக்கு இடையே நுழைந்து சென்றுள்ளார். அப்போது, 519 தடம் எண்  கொண்ட மாநகர பேருந்தை டிரைவர் ரவி பேருந்து இடையே ெபண் வருவதை கவனிக்காமல் பேருந்தை இயக்கி உள்ளார். இதில் இரண்டு  பேருந்துகளுக்கும் இடையே சிக்கிய வள்ளி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். விபத்து குறித்து மாம்பலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் வள்ளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர்,  விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கவனக்குறைவாக வாகனத்தை இயக்கியதாக 519 மாநகர பேருந்து டிரைவர் ரவி மற்றும் 5ஜி மாநகர  பேருந்து டிரைவர் கண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு மட்டுமே போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கேரள உயர்நீதிமன்றம் கண்டிப்பு

$
0
0

திருவனந்தபுரம்: ‘‘சபரிமலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருதலைபட்சமாக எந்த  கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது’’ என்று கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர். சபரிமலையில் போலீஸ்  கெடுபிடியை தளர்த்தக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது உயர் நீதிமன்றம்  பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலையில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் மட்டுமே போலீஸ் நடவடிக்கை எடுக்க  வேண்டும். ஒருதலைபட்சமாக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்க கூடாது. சபரிமலையில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும். ஐயப்ப பக்தர்கள்  உட்பட யாரும் எந்த போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது.சபரிமலையில் போலீஸ் கெடுபிடி எல்லை மீறுகிறது. சமீபத்தில் தரிசனத்திற்கு வந்த நீதிபதியை கூட போலீசார் அவமதித்துள்ளனர். இது மிகவும்  தவறான நடவடிக்கை. நீதிமன்றத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது. சபரிமலையில் நாமஜெபம் நடத்துபவர்களுக்கு ஏன் தடை விதிக்க வேண்டும்?  பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று தானே கோஷமிடுகிறார்கள். சாமியே பெண்களை அனுமதிக்க வேண்டாம் என்றா கோஷமிடுகிறார்கள். இது  எப்படி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அமையும்? சபரிமலையில் பக்தர்கள் போராட்டம் எதுவும் நடத்த கூடாது. நாமஜெபம் நடத்துவதில் தவறில்லை. போலீசார் பக்தர்களிடம் அன்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும். 144 தடை உத்தரவின்படி போலீசார்  நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை. நடைப்பந்தலில் பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும். சபரிமலையில், ஓய்வுபெற்ற  நீதிபதிகள் சிரிஜெயன், ராமன் மற்றும் டிஜிபி ஹேமச்சந்திரன் ஆகிய 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்படுகிறது. சன்னிதானத்தில் உள்ள  நடைபந்தலில் பெண்கள், குழந்தைகள், நோயாளிகள், ஊனமுற்றவர்கள் ஓய்வெடுக்க தனி இடம் ஒதுக்க வேண்டும். நடைப்பந்தல் நுழைவு வாயிலில் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். பக்தர்களுக்கு அமைதியான முறையில் தரிசனம் செய்ய போலீஸ் வசதி  ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதில் இடையூறு ஏற்பட்டால் மட்டுமே போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்க போலீசுக்கு உரிமை உண்டு என்ற அரசின்  வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.  இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

$
0
0

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பாபநாசம் அணைக்கரை, நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகம்... வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

$
0
0

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.01 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.95-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகிய காரணிகளால் கடந்த சில மாதங்களாக பெட்ரோல்-டீசல் ஆகியவற்றின் விலை வெகுவாக உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக அவற்றின் விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது. இதனை அடுத்து இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 34 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.01 காசுகளாக உள்ளது. மேலும் டீசல் நேற்றைய விலையில் இருந்து 39 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.71.95 காசுகளாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரயில்வே காவல்துறை ஐஜி.பொன்.மாணிக்கவேலுக்கு பிரிவு உபச்சார விழா

$
0
0

சென்னை: ரயில்வே காவல்துறை மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐஜி.பொன்.மாணிக்கவேல் நாளை ஒய்வு பெறுவதையொட்டி சென்னையில் பிரிவு உபச்சார விழா நடைபெற்று வருகிறது. அயனாவரத்தில் நடக்கும் பிரிவுசார விழாவில் ரயில்வே காவல்துறையினருக்கு  ஐஜி.பொன்.மாணிக்கவேல் அறிவுரை கூறிய வருகிறார்.

சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் தகவல்

$
0
0

சென்னை: டெல்டா உட்பட தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் வரும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இலங்கை அருகே காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Viewing all 120575 articles
Browse latest View live